5 பேருக்கு மறுபிறவி கொடுத்த உலகின் 3 வயது குட்டி இளவரசி

சீனாவில் 3 வயது குழந்தையின் உறுப்பு தானத்தின் மூலம் 5 பேர் மறுபிறவி எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்ஸி (Jiyanksi) மாகாணத் தலைநகரான நான்சங் (Nansong)  நகரை சேர்ந்த 3 வயது சிறுமியான லியு ஜிங்யாவோ (Leu Jingyavo) கடந்த சில மாதங்களாக தளர்வாகவும், சோர்வாகவும் காணப்பட்டாள்.

இந்நிலையில் மருத்துவரை அணுகியபோது, ஒருவகை மூளைப்புற்று நோயால் பாதிக்கப்படுள்ள லியு ஜிங்யாவோ, இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று கூறி மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர்.

இதற்கிடையில், ஜியாங்ஸி மாகாண அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லியு ஜிங்யாவோவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தலைப்பகுதி மெல்ல,மெல்ல வீங்கத் தொடங்கிய, பேசும் திறனும் குறைய ஆரம்பித்தது.
அன்பு மகளின் உயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவளது நினைவுகள் நம்மோடு மட்டுமின்றி, வேறு சிலரோடும் நிலைத்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்த லியு ஜிங்யாவோ-வின் பெற்றோர் பயன்படத்தக்க அவளது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மிகச் சிறிய வயது என்பதால் அவளது இரு சிறுநீரகங்களில் ஒன்று மட்டுமே பூரண நிலையில் வளர்ச்சி அடைந்திருந்தது.

அந்த சிறுநீரகம் ஒரு நபருக்கு பொருத்தப்பட்டது. இரு கண் விழிகளும் தலா ஒருவருக்கும், இதயம் மற்றும் ஈரல் தலா ஒருவருக்கும் பொருத்தப்பட்டு அவர்கள் ஐந்து பேரும் நலமாக உடல்நிலை தேறி வருவதாக ஜியாங்ஸி மாகாண அரசு மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவரான ழாங் மிங் (Mang Ming) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், இந்த உலகின் மிகவும் அழகான குட்டி இளவரசியான எனது மகள் எங்களை விட்டு மறைந்தாலும், ஐந்து பேரின் வாழ்க்கைக்கு ஒளியூட்டி விட்டுச் சென்றிருக்கிறாள் என்று கண்ணீர் கலந்த பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.