கண்ணும் மூக்கும் இல்லாமல் பிறந்த அபூர்வ சிறுவன்

மொராக்கோவில் அபூர்வமான முறையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளமை மருத்துவ துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. மூன்று வயது சிறுவனான யாஹ்யா எல் ஜாபாலிக்கு இரண்டு கண்களும், மூக்கு இருக்கும் இடத்தில் ஒரே ஒரு சிறு துவாரம் மட்டுமே உள்ளது.

இந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய உதவி செய்யுமாறு சமூக வலைத்தளம் மூலம் கோரப்பட்டிருந்தது. இதனை அறிந்த பாத்திமா பராக்கா என்ற பெண்மணி அவனுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

தற்போது அச்சிறுவனை மெல்போர்னுக்கு வரவழைத்துள்ள அவர், அவனை அங்கு அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள டோனி ஹோல்ம்சின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உள்ளார்.


வங்கதேசத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்களான திரிஷ்ணா மற்றும் கிருஷ்ணா ஆகியோரை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்து தனித்தனி பிறப்புகளாக்கியவர் டோனி ஹோல்ம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஹ்யாவுக்கு வரும் டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இரு பிரிவாக பிரிந்துள்ள அவனது முகப்பகுதியை ஒன்றாக்கி அவனுக்கு மூக்கை உருவாக்க ஹோல்ம்ஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவனது சொந்தமான தசைகளையே பயன்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

பிறப்பால் வித்தியாசமான முக அமைப்பை கொண்டிருந்தாலும் அவனை அவனது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்வதால் எவ்வித சலனமும் இன்றி மகிழ்ச்சியாகவே யாஹ்யா வாழ்ந்து வருகிறான். ஆனால் அவனை பார்க்கும் மற்றவர்களின் எதிர்ப்பால் தனது கிராமத்தில் எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட அவனது முகத்தை மூடி கொண்டுதான் செல்கிறான். அவனால் வாய் பேசவும் முடியாது என்பதும் வருத்தத்தை அளிக்க கூடிய விஷயமாகும்.

தங்களது மகனின் நிலை பற்றியும் அவனுக்கு யாராவது மருத்துவ சிகிச்சை அளிக்க உதவினால் நன்றாக இருக்கும் என்று தனது நண்பரிடம் யாஹ்யாவின் அப்பா கூறியதால், அந்த நண்பர் சமூக வலைதளம் மூலம் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த பாத்திமா தற்போது அச்சிறுவனுக்கு உதவ முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.