உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் “உயிரை கொல்லக் கூடியது” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் அமைந்துள்ளது. வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள ஆலன்விக்(Alnwick) என்ற தோட்டத்தில் பல ஏக்கர் நிலத்தில் கண்ணைகவரும் வண்ண வண்ண நிறங்களில் மனம் வீசும் ரோஜா மலர்கள் மற்றும் நீரூற்றுகள் என பல வகையான அம்சம்சங்கள் உள்ளன.

இந்த தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிட்டத்தட்ட 100 வகையான விஷ செடிகளுக்கென்று தனியாக ஒரு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் தோட்டமான இதன் வாசல் கதவுகளில், எலும்பு கூடுகள் வரையப்பட்டு ”இந்த செடிகள் உயிரை கொல்லக் கூடியது” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரிய நிறத்திலான பெரிய இரும்பு கதவுகளுக்கு பின்னால் அமைந்துள்ள அந்த தோட்டத்தினுள் செல்லும் பார்வையாளர்கள், ஒரு இடத்தில் நிற்ககூடாது என்றும், செடிகளையும் மலர்களையும் தொடக்கூடாது, நுகரக்கூடாது என்று வெளிப்படையாக அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனெனில் அந்த விஷ செடிகளை சில நிமிடங்கள் தொடர்ந்து முகர்ந்தால் கூட பலவிதமான பக்கவிளைவுகள் முதல் மரணம் கூட ஏற்படும் அபாயமுள்ளது. இங்கு உள்ள சில செடிகளின் பாகங்களை உட்கொள்வதாலோ அல்லது நுகர்வதாலோ அதீத தூக்கம், வாந்தி, கோமா போன்ற பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இங்குள்ள செடிகளில் ஒன்றான மான்க்ஸ்ஹுட்(monkshood) என்பதன் வேர்களை மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் சிறிது போட்டால் போதும், அது மொத்த கிராமத்தையும் கூண்டோடு கொள்ளும் அளவுக்கு வீரியம் வாய்ந்தது.